பிரபல பொப் பாடகி மடோனா இசை நிகழ்ச்சியின் போது, பிரான்ஸ் அரசியல் கட்சித் தலைவரான மரினா லீ பென்னின் நெற்றியில் நாஜிக்களின் சின்னத்தை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடைத் திரையொன்றில் லீ பென்னின் நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம் தெரியும் படி மடோனா ஒரு காட்சியைக் காட்டினார்.
அடுத்ததாக ஜீலை மாதம் 14ஆம் திகதி பிரான்ஸ் நாட்டுத் தலைநகரமான பாரிசில் நடந்த நிகழ்ச்சியிலும் இதே போன்றதொரு திரைக்காட்சி தோன்றியது. உடனே தேசிய முன்னணிக் கட்சி மடோனா மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தது.
இதனையடுத்து ரைஸ் நகரில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் இவ்வாறு காட்டப்படவில்லை. மேலும் இனிமேல் இவ்வாறு காட்டப்படமாட்டாது என்று மடோனா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் - மேரிடைம்ஸ் நிர்வாகப் பகுதியின் தேசிய முன்னணிக் கட்சித் தலைவரான லிடியா ஸ்கினார்டி என்பவர், மடோனாவின் முடிவை அறிவுப்பூர்வமானது என்று பாராட்டியுள்ளார்.
SOS ரேசிஸ்ம் என்ற இனவாத எதிர்ப்பு அமைப்பு மடோனாவின் இந்த மாற்றம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு கலைஞருக்கு அரசியல் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருப்பதாகவும், அதன்படியே மடோனா செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளி ஆலின் லெ பெய்ல் - கிரெமர் கூறியுள்ளார்.